மத்திய பிரதேச சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், அம்மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 76.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையில் மிக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும், கடந்த 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
சுமார், 5 கோடியே 60 இலட்சம் வாக்காளர்களுக்காக, மாநிலம் முழுவதும் 64 ஆயிரத்து 626 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்றனர். இத்தேர்தலில், 76.22 சதவீத வாக்குகள் பதிவாகின.
மத்திய பிரதேச மாநிலம் கடந்த 1956-ஆம் ஆண்டில் உருவானதில் இருந்து, சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், 75.63 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 0.59 சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலில், அதிகபட்சமாக சியோனி மாவட்டத்தில் 85.68 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக அலிராஜ்பூா் மாவட்டத்தில் 60.10 சதவீத வாக்குகளும் பதிவாகின.