அரசுப் பேருந்தில், தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவரின் இருபாதங்களும் அகற்றப்பட்டுள்ளன.
படியில் பயணம் நொடியில் மரணம் என்று கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சில பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் அதை கேட்காமல், படியில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில், கடந்த 17-ஆம் தேதி குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் மாலை பள்ளி முடிந்ததும், மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில், அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.
பேருந்து குன்றத்தூா் தேரடி பகுதியைக் கடந்தபோது, பேருந்தின் முன் படிக்கட்டில் பயணித்த மாணவர் தவறி விழுந்தார். அப்போது, பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், மாணவரின் இரு கால்களும் சேதமடைந்தன.
வலியால் துடித்த மாணவனைப் பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு படுகாயமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவரின் உயிரை காப்பாற்றும் வகையில், இரு பாதங்களும் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது தொடர்பாக மருத்துவா்கள் கூறியதாவது: மாணவரின் இரு பாதங்களும் மிக மோசமான நிலையில் நசுங்கியிருந்தன. இதனால், அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் இரு பாதங்களும் அகற்றப்பட்டுள்ளன.
தற்போது, மாணவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூட்டுப்பகுதி மற்றும் இதர பகுதிகளில் ஏற்பட்ட காயங்களுக்கும் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
மாணவர்கள் படியில் தொங்கியபடி பல சேட்டைகளைச் செய்வது அவர்களுக்கு வேண்டுமானால், சாதனையாக தோன்றலாம். ஆனால், பெற்றோர்களுக்கு இது வேதனையைக் கொடுக்கும்.