இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்க் குற்றம் புரிந்திருக்கிறார். ஆகவே, எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சி எம்.பி. பேசியிருப்பது கடும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல் இராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் 11,750 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இஸ்ரேல் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழப்பதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கும் இந்தியா, தீவிரவாதத்தை ஒடுக்கும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு ஆதரவும் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகிறது.
ஏற்கெனவே 38 டன் நிவாரணப் பொருட்களுடன் முதல் விமானம் சென்ற நிலையில், இன்று 32 டன் நிவாரணப் பொருட்களுடன் 2-வது விமானம் புறப்பட்டுச் சென்றிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. அதேபோல, கேரள முதல்வர் பினராயி விஜயனும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
ஆகவே, கேரளாவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பேரணிகள் மற்றும் கூட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் சமீபத்தில் நடந்த பேரணியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் கலீத் மஷால், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், ஐக்கிய முஸ்லிம் ஜமாத் சார்பில் பாலஸ்தீன ஆதரவு பேரணி காசர்கோட்டில் நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் காசர்கோடு எம்.பி. ராஜ்மோகன் உன்னிதான், “ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். இதற்கு நூரெம்பர்க் மாடலை நாம் பின்பற்ற வேண்டும்.
2-ம் உலகப் போருக்குப் பிறகு நாஜி படையைச் சேர்ந்தவர்களை ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நூரெம்பர்க்கில் வைத்து விசாரித்தபோது, எவ்வித விசாரணையும் இல்லாமல் சுட்டுக் கொல்லும் வகையில் தீர்ப்பளித்தனர். அந்த மாடலை தற்போது இஸ்ரேலுக்கு எதிராக செயல்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்த உலகின் முன்பு போர்க்குற்றவாளியாக நிற்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, எந்த விசாரணையும் இல்லாமல் உடனடியாக சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று கூறினார். ராஜ்மோகன் உன்னிதானின் இந்த பேச்சுதான் பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு நாட்டின் பிரதமரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று அவர் பேசியிருப்பது காங்கிரஸ் தலைமைக்கே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.