தமிழகம் முழுவதும் இன்று 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. சென்னையில் மணலி, குரோம்பேட்டை, கொரட்டூர் ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.), விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பேரணி ஆகியவை நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது.
இந்த சூழலில், கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், தமிழக காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. எனவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் உயர் நீதிமன்றத்தை நாடியது.
இதற்கு உயர் நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி அளித்தது. எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதலுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது. இதன் பிறகு, தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரியது. ஆனால், வழக்கம்போல தமிழக அரசு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே. ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மாலை 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.
அந்த வகையில், சென்னையில் மணலி, கொரட்டூர், குரோம்பேட்டை ஆகிய 3 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றன.