சென்னையில் இன்று 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னையில் மணலி, கொரட்டூர், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் அணிவகுப்பு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
கொரட்டூரில் டாக்டர் நல்லிகுப்புசுவாமி விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜில் இருந்து மாலை 3.30 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது.
பக்தவச்சலம் காலேஜ் ரோடு, ஆர்.கே. அவென்யூ ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் ரோடு என சுமார் 3.30 கி.மீ. தூரம் சுற்றி வந்த அணிவகுப்பு ஊர்வலம், மாலை 4.45 மணியளவில் மீண்டும் விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் காலேஜிலேயே நிறைவடைந்தது.
தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் சேவா சங்கத்தின் அறங்காவலரும், பறையர் பேரியக்கத்தின் தலைவருமான சே.சிவகுரு பறையனார் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்பாரத மக்கள் தொடர்பாளர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் கம்மவார் நாயுடு சங்கத்தின் துணைத் தலைவர் வி.எம்.பிரபாகரன், அகில இந்திய நாடார் கூட்டமைப்பு கல்விக்குழுத் தலைவர் பிரபாகரன் நாடார், தேசிய யாதவ மகாசபா மாநிலச் செயலாளர் குணசீலன் யாதவ், ரெட்டி நலச்சங்க அலுவலகச் செயலாளர் செல்வராஜ் ரெட்டி, பாரம்பரிய ஸ்தபதிகள் சிற்பக் கலைஞர்கள் சங்கச் செயலாளர் சுந்தர மூர்த்தி ஸ்தபதி, பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்க கொரட்டூர் கிளைத் தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 1,300 பேர் கலந்துகொண்டனர்.