சென்னை மணலியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகம் முழுவதும் 55 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னையில் மணலி, கொரட்டூர், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் அணிவகுப்பு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
மணலியில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது பிரதான சாலையிலுள்ள ஸ்ரீராம் மஹால் அருகில் இருந்து மாலை 3.30 மணியளவில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம், 3-வது பிரதான சாலை, சின்னமாத்தூர் வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி வந்து, சுமார் 4.30 மணியளவில் மீண்டும் மாத்தூர் எம்.எல்.டி.வில் நிறைவடைந்தது.
பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை சன்மார்க்கநேசன், சிந்தனை மருத்துவர் எம்.ஏ.உசேன் தலைமை வகித்தார். டி.எஸ்.எஸ். நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் திருவொற்றியூர் தலைவர் ஆர்.பி.மனோகரன், அகில பாரதீய சத்ரிய மகாசபாவின் மாநிலத் தலைவர் டாக்டர் எம்.கே.குணா, இந்திய மீனவர் சங்கத் தலைவர் டாக்டர் எம்.டி. தயாளன், சென்னை உயர் நீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் எஸ்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். மாநில இணை அமைப்புச் செயலாளர் ஸ்ரீ பிரசோபகுமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். சென்னை கோட்டத் தலைவர் எஸ்.சந்திரசேகர் செய்திருந்தார். இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 760 பேர் உட்பட சுமார் 1,000 பேர் கலந்துகொண்டனர்.