தூம் திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் காத்வி மும்பையில் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57.
மறைந்த குஜராத்தி எழுத்தாளர்-தயாரிப்பாளர்-இயக்குநர்-நடிகர் மனுபாய் காத்வியின் மகன் சஞ்சய் காத்வி.
இவர், கடந்த 2001 -ம் ஆண்டில் தேரே லியே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, 2004 -ல் தூம் படமும், 2006 -ல் தூம் 2 ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் அபிஷேக் பச்சன் நடிப்பில் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், மும்பை லோகந்த்வாலா வளாகத்தில் இன்று நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இயக்குநர் சஞ்சய் காத்வி மரணத்திற்கு மும்பை திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.