சென்னை எழும்பூரில் பாண்டியன் இரயில் புறப்பாடு குறித்து, மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்த புகாருக்கு, தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், கடந்த 16 -ம் தேதி சென்னைக்கு வந்த ரயில்வே போர்ட் உறுப்பினர் ரூப் நாராயணன் சங்கர் ஆய்வுக்காக ராமேஸ்வரம் செல்கிறார் எனத் தகவல் வெளியானது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திற்கு வந்த நிலையில், அவருக்காக 4-வது நடைமேடையில் தனி இரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக 4-வது நடைமேடையில் சென்னையில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் விரைவு இரயில்தான் நிறுத்தப்படும். ஆனால், அன்றைய தினம், ரூப் நாராயணன் சங்கர் செல்வதற்காக வேறு இரயில் நிறுத்தப்பட்டது.
இதனால், பாண்டியன் விரைவு இரயில், 5-வது நடைமேடையில் மாற்றி நிறுத்தப்பட்டது. கடைசி நேர குழப்பத்தால், பாண்டியன் விரைவு இரயிலில் பயணிக்கவிருந்த முதியவர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மாற்று நடைமேடையை நோக்கி அலைக்கழிக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாருக்கு தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், சென்னை எழும்பூர் இரயில் நிலையம் 9 நடை மேடை கொண்டது. முதல் 3 நடைமேடை குறைந்த நீளம் கொண்டவை. இதனால், அதிக நீளம்கொண்ட 4-வது நடைமேடையைப் பீக் ஹவர் நேரங்களில் நீண்டதூர விரைவு இரயில்களைக் கையாள்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் பல முறை 5-வது நடைமேடையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் விரைவு இரயில் இயக்கப்பட்டுள்ளது.
மதுரை எம்பி குறிப்பிடும் தினம் அன்று, முழுக்க முழுக்க நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காகவே பாண்டியன் விரைவு இரயில் மாற்றி நிறுத்தப்பட்டது. பயணிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் இல்லை எனத் தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.