நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். தற்போது 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பக்தர்கள் வசதிக்காகத் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மினி பேருந்துகளில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோவில் வரை ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் இயக்குவதற்கு அனுமதி இல்லை. சரக்குகள் ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்குக் கொண்டு வந்து ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உள்ளூரில் ஆட்டோவில் செல்லும் நபர் ஒருவருக்குக் குறைந்தபட்சம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.