கேரள மாநிலம், காந்தலூரில் முதல் முறையாக விவசாயி ஒருவர் குங்குமப்பூ பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். ஒரு கிலோ ரூபாய் 3 இலட்சம் வரை விற்கப்படுகிறது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள காந்தலூர் கிராமம் இயற்கை வளம் நிறைந்த மலைப்பகுதியாக உள்ளது. இங்கு, ஆப்பிள், ஸ்டாபெர்ரி, பிளாக்பெரி என குளிர் பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரில் மட்டும் விளையக்கூடிய குங்குமப்பூ, வேளாண் அதிகாரிகள் உதவியுடன், காந்தலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி இராமமூர்த்தி நிலத்தில், பரிசோதனை முறையில் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, காஷ்மீர், பாம்போரா கிராமத்திலிருந்து, குங்குமப்பூ கிழங்கு கொண்டு வரப்பட்டு, இயற்கை உரங்கள் இட்டு, நடவு செய்யப்பட்டது. தற்போது, காஷ்மீரில் விளைவது போலவே, காந்தலூர் பகுதியிலும் குங்குமப்பூ நன்கு வளர்ந்து, முதல் முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி கூறியதாவது, குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து, 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு, ஒரு இலட்சம் கிழங்கு நடவு செய்தால், 2.5 இலட்சம் பூக்கள் பூக்கின்றன.
ஒரு ஏக்கருக்கு, 1.5 கிலோ குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ குங்குமப்பூ 3 இலட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு, இரு மாதங்களில் சராசரியாக, 4.5 இலட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைக்கிறது. சாகுபடி செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அவை வளர்வதற்கு, மழை குறைவாகவும், குளிர் சீதோஷ்ண நிலை நிரந்தரமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.