திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற சிறுபான்மை பிரிவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரியது. ஆனால், வழக்கம்போல தமிழக அரசு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே. ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று மாலை 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை பிரிவினர் தயாராக இருந்தனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்வதாக தெரிவித்தனர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு சிறுபான்மை பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அவர்களை வலுக்கட்டாயமாக காவல்துறையினர் வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதேபோல் வேலூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.