உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இவர்களில் ரோஹித் சர்மா சற்று நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்துகொண்டு வந்தார். அப்போது மறுமுனையில் இருந்த கில் 7 பந்துகளில் 4 ரன்களுக்கு மிட்சேல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடினார். ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ரன்களுக்கு கிளென் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 1 பௌண்டரீஸ் அடித்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கே.எல். ராகுல் களமிறங்கினார்.
ராகுல் மற்றும் விராட் கூட்டணி சிறப்பாக விளையாடி வந்தது. இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி 57 பந்துகளில் தனது அரைசத்தை பதிவு செய்தார். பின்னர் 63 பந்தில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 107 பந்துகளில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து, 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில், தொடக்க வீரர்களாக, டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.
டேவிட் வார்னர் 7 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்குக் கொண்டுச் சென்றது.
மிக சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட், 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 43 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மார்னஸ் லபுஷேன் 58 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
சிறப்பாக விளையாடி சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.