துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த “கேலக்ஸி லீடர்” என்கிற சரக்குக் கப்பல், ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இக்கப்பலில் இந்தியர்கள் யாராவது உள்ளனரா என்பது பற்றிய தகவல் இல்லை.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றதோடு, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.
இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் உயிரிழந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 1,000 ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 12,000 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 25,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.
இப்போரில் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆகவே, இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் கொடி பறக்கக்கூடிய கப்பல்கள் செங்கடல் பகுதியில் சென்றால் கடத்துவோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியாவுக்கு வந்த ‘கேலக்ஸி லீடர்’ என்கிற சரக்குக் கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று கடத்திச் சென்றனர். இதை இஸ்ரேலிய இராணுவமும் உறுதி செய்திருக்கிறது.
இது குறித்து இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “ஏமன் அருகே தெற்கு செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்தி இருக்கிறார்கள். இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் மிக மோசமான சம்பவம். இக்கப்பலில் இஸ்ரேலியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.
எனினும், அக்கப்பல் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல. ஆபிரஹாம் உங்கர் என்னும் இஸ்ரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமானது” என்று தெரிவித்திருக்கிறது. அதேசமயம், அக்கப்பல் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்றும், ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஈரானின் வழிகாட்டுதலுடன் ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கிறது. இக்கடத்தலை இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.