மணிப்பூர் தலைநகர் இம்பாலில் விமான நிலையத்துக்கு மேலே பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
உலகின் பல்வேறு நாடுகளில் வானில் மர்ம பொருள் பறந்ததாக ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன. அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற மர்ம பொருள் பறந்ததாக தகவல்கள் உண்டு. இவை தட்டு வடிவில் இருப்பதாகவும், இது வேற்று கிரக வாசிகளான ஏலியன்களாக இருக்கலாம் என்கிற செய்திகளும் உலா வருகின்றன. எனவே, இந்த பறக்கும் தட்டை வைத்தும், ஏலியன்களை வைத்தும் ஏராளமான திரைப்படங்களும் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் மர்மப் பொருள் பறந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்திருக்கிறது. அப்போது, விமான கட்டுப்பாட்டு அறைக்கு மேலே அடையாளம் தெரியாத மர்ம, பறக்கும் பொருள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
விமான கட்டுப்பாட்டு அறையின் கோபுரத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே, அந்த மர்மப் பொருள் தெரிந்திருக்கிறது. இதை விமான நிறுவன ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் பார்த்திருக்கிறார்கள்.
அந்த மர்மப் பொருள் வெள்ளை நிறத்தில் தட்டு வடிவில் இருந்திருக்கிறது. இது டெர்மினல் கட்டடத்தின் மேல் பறந்து, விமான கட்டுப்பாட்டு அறையின் கோபுரத்திற்கு மேலே தெற்கு நோக்கி நகர்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்றிருக்கிறது.
இதன் பிறகு, விமான ஓடுபாதையில் தென்மேற்கு நோக்கி நகர்ந்திருக்கிறது. அந்த மர்ம பொருள் விமான ஓடுபாதைக்கு மேலே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, உடனடியாக வான்வெளி மூடப்பட்டது.
இதனால், இம்பால் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படவும், தரை இறங்கவும் அனுமதிக்கப்படவில்லை. அந்த வகையில், கொல்கத்தாவில் இருந்து 173 பயணிகளுடன் இம்பாலுக்கு வந்த இண்டிகோ ஏ320 விமானம் தரையிறங்க அனுமதி தரப்படவில்லை.
இதையடுத்து, அந்த விமானம் சுமார் 20 நிமிடங்கள் வானத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தது. பின்னர், பிற்பகல் 3 மணிக்கு அந்த விமானம் அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்திக்கு திருப்பி விடப்பட்டது.
அதேபோல, டெல்லியில் இருந்து 193 பயணிகளுடன் இம்பாலுக்கு வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் கொல்கத்தாவுக்கு திரும்பி விடப்பட்டது. இதனால், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இம்பால் விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மாலை 4.05 மணியளவில் அந்த மர்மப் பொருள் அப்படியே காணாமல் போய்விட்டது. இதன் பிறகு, ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து இம்பால் வான்வெளியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மாலை 5.35 மணி வரை நடந்த சோதனையில் எந்தவொரு அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, இம்பால் விமான நிலையத்தில் விமான சேவையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பறக்கும் தட்டில் வந்தது ஏலியன்களா என்று பொதுமக்கள் பீதியடைந்திருக்கின்றனர்.