டெல்லியில் காற்று மாசுபாடு சற்று குறைந்துள்ளதால், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டன.
தலைநகர் டெல்லியில், கடந்த சில மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும், காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் காற்று மாசுபாடு உச்சக்கட்டத்தை அடைந்ததைத்தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு சற்று குறைந்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளதால், இன்று முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனங்களில் கொண்டு வந்து பள்ளிகளில் விட்டனர். 10 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.
மேலும், டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.