ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்துள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்வேறு நாடுகளில் ஆண்டு முழுவதும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஏதாவது ஒரு அணி சாம்பியன் பட்டத்தை வெல்கின்றன. எத்தனை கோப்பைகளை வென்றாலும் ஒவ்வொரு அணிக்கும், ஒவ்வொரு வீரருக்கும், உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கும்.
உலகக்கோப்பையை வென்று விட்டால் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஏதோ உலகத்தையே விலைக்கு வாங்கி விட்டதாக அவர்கள் சந்தோஷ கடலில் திளைப்பார்கள்.
அந்த கோப்பையை வணங்கியும், முத்தமிட்டும், குழந்தையை அணைத்துக்கொள்வது போல் அணைத்துக்கொண்டும் வீரர்கள் துள்ளி திரிவார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத செயலில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ஈடுபட்டுள்ளது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பையை மதிக்காமல், அதன் மீது கால் வைத்து அவமரியாதை செய்ததாக அவருக்கு இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஆஸ்திரேலியா, அந்த விளையாட்டின் உயரிய உலக கோப்பையை மதிக்காமல் இருப்பதற்கு பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.