எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் (ஆர்.எஸ்.எஸ்.), விஜயதசமியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பேரணி நடந்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது.
இந்த ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கோரியது. ஆனால், தமிழக அரசு மறுப்புத் தெரிவித்து விட்டது. எனவே. ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலின்படி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்எஸ்எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் சூர்ய காந்த், நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்து ஆட்சேபனைகள், பரிந்துரைகளை கேட்ட பின்னரே உயர் நீதிமன்றம் அத்தகைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், நவம்பர் 19 அல்லது 26 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ் ) அணிவகுப்பு நடத்த அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது.
அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ள வழித்தடங்களை மூன்று நாட்களுக்குள் மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பாதைகள் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நவம்பர் 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றத் தவறியதாக, நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்தது.
மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி மறுத்ததையடுத்து நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று, பிரதிவாதிக்கு (ஆர்.எஸ்.எஸ் ) நிவாரணம் கிடைத்துள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடிக்க மறுத்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு நீதிமன்றத்தின் முன் முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் ஆர்எஸ்எஸ் பேரணி ஊர்வலத்திற்கு அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.