ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், டிரஸ்ஸிங் அறைக்கு சென்று பாரத வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்த வீடியோ வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி கண்டிப்பாக உலகக்கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் சோகத்தின் உச்சிக்கு சென்றனர். அகமதாபாத்தில் போட்டியை நேரடியாக பார்த்தவர்களும் மட்டுமின்றி உலகம் முழுவதும் போட்டியை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.
இந்நிலையில், டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ரோகித் சர்மா, விராட் கோலியை அருகில் அழைத்து கையை பிடித்துக்கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதனையடுத்து ஒவ்வொறு வீரராக சந்தித்த பிரதமர் மோடி, முகமது ஷமியை கண்டதும் தன் அருகே அழைத்து கட்டி அணைத்துக்கொண்டார்.
நியூசிலாந்து எதிரான அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஷமி. பிரதமருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்தார்.