உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலளார்கள் நலமுடன் இருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில், பிரதமர் மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் இரண்டாவது முறையாக கேட்டறிந்தார்.
சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, கடந்த 12ம் தேதி சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது.
இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தொழிலாளர்கள் நலமாக இருப்பதை எண்டோஸ்கோபி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், மீட்புக் குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் முதல் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு உணவு மருந்து உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் இரண்டாவது முறையாக கேட்டறிந்தார். எங்களுக்கு கிடைத்த செய்தி மிகவும் அருமையாக உள்ளதாக சர்வதேச சுரங்கப்பாதை அண்டர்கிரவுண்ட் ஸ்பேஸ் பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வீட்டிற்கு அழைத்து வரப்போகும் அந்த மனிதர்களின் முகங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.