ஊராட்சிகளின் அதிகாரத்தை தமிழக அரசு பறித்துக் கொண்டதாக, ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள் அருண்ராஜேஷ், வேதநாயகி, ரம்யா, சிவராசு ஆகியோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் மூலமாக, தமிழகத்தில் உள்ள கிராமங்களில் சாலை பராமரிப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு, வீட்டு வசதி போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், கிராம ஊராட்சியின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் (1994) 104 மற்றும் 106 பிரிவுகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில், கிராம ஊராட்சி செயலாளரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, பணி மாற்றம் உள்ளிட்ட அதிகாரம், கிராம ஊராட்சியிடம் இருந்து பறிக்கப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கடந்த ஆண்டுச் சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்ததுடன், செப்டம்பர் மாதம் ஊராட்சி செயலாளர்களுக்கான புதிய பணி விதிகளையும் அரசு அறிவித்துள்ளது.
ஊராட்சி செயலாளர்கள், கிராம ஊராட்சி மன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும். ஆனால், அவர்கள் தற்போது தனித்துவிடப்பட்டதால் குறுநில மன்னர்களைபோலச் செயல்பட்டு வருகின்றனர்.
ஏராளமான ஊழல்கள் நடைபெறுகின்றன. இதனால், ஊராட்சி செயலாளர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி மாற்றம் செய்யவேண்டும். எனவே, இந்தச் சட்டத் திருத்தத்தை உடனே தமிழக அரசு திரும்பபெற வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாகத் திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் ஊராட்சிகளின் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளோம் என்றனர்.