தமிழ்நாடைச் சேர்ந்த கல்பனா பாலன் என்ற பெண் அதிக பற்கள் கொண்ட பெண் என்ற வரிசையில், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டமான தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கல்பனா பாலன். வயது 26. வழக்கமாக ஒவ்வொரு மனிதருக்கும் 32 பற்கள் மட்டுமே இருக்கும். ஆனால், கல்பனா பாலனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக, வழக்கமான பற்களைவிட கூடுதல் பற்கள் இருப்பதாக உணர்ந்தார். முதலில் இது தொடர்பாக அவர் யாரிடமும் விவாதிக்கவில்லை. அமைதியாகவே இருந்துவிட்டார்.
ஆனால், நாளுக்கு நாள் செல்ல அவருக்கு பயம் தொற்றிக் கொள்ளவே, பல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அப்போது, அவரது வாயின் கீழ் தாடையில் இரண்டு பற்களும் மேல் தாடையில் இரண்டு பற்களும் என கூடுதலாக 4 பற்கள் முளைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நான்கு பற்களும் அவர் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே வளர ஆரம்பித்துள்ளன. இவருக்கு கூடுதலாக பற்கள் இருப்பதால் எந்த வலியும் இல்லை என்றும், ஆனால், உணவு சாப்பிடும்போது மட்டும் அவரது பற்களில் உணவு சிக்கிக் கொண்டதாகவும், இதனால் சில தருணங்களில் பிரச்சினையை தாம் எதிர் கொண்டதாகவும் கல்பனா பாலன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தனது கூடுதல் பற்களை அகற்ற பல் மருத்துவரிடம் ஆலோசனை செய்து உள்ளார். மேலும், கூடுதல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். கடைசியில் கூடுதலாக வளர்ந்த 4 பற்களை அகற்றும் முடிவை கைவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு பாரமாக இருந்ததாக கருதப்பட்ட அந்த 4 பற்கள், கல்பனா பாலனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வைத்துள்ளது. ஆம், உலகத்திலேயே அதிக பற்களை கொண்ட பெண் என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு கடனாவைச் சேர்ந்த இவ்வானோ மெலோடி என்பவர் அதிக பற்கள் உடையவர் என்ற சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை கல்பனா பாலன் தற்போது முறியடித்துள்ளார்.