காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பத் தயாராக இல்லை. அப்படி அவர்கள் வாக்குறுதி அளிப்பதாக இருந்தால், ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளைத்தான் மீண்டும் அளிக்க முடியும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் ராஜஸ்தானில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மற்றும் சிகாரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளை பிரதமர் மோடி உருவாக்கினார். அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு 22 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இவற்றில் 9 லட்சம் வீடுகளை கட்ட விடாமல் அசோக் கெலாட் தடுத்து விட்டார்.
பிரதமர் மோடி தலைமையின் கீழ் ஏறக்குறைய 80 கோடி மக்கள் 5 கிலோ கோதுமை அல்லது 5 கிலோ அரிசி பெறுகிறார்கள். அசோக் கெலாட் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. எங்களது அரசு வந்தால் சாதாரண மக்களுக்கு குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசல் கிடைக்கும்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை யாரும் நம்பவில்லை. ஊழல், அட்டூழியங்கள், பெண்கள் துன்புறுத்தலுக்கு மட்டுமே காங்கிரஸால் உத்தரவாதம் அளிக்க முடியும். அப்படி அவர்கள் வாக்குறுதி அளிப்பதாக இருந்தால், ஏற்கெனவே பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளைத்தான் திரும்பமும் அளிக்க முடியும். இந்த தேசமும், நாட்டு மக்களும் பிரதமர் மோடியுடன் இருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து, ஜெ.பி.நட்டா பிகானரில் ரோடு ஷோவையும் நடத்தினார்.