காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள ஒரு பள்ளியின் குடிநீர் தொட்டியில், மர்ம நபர்கள் மலம் கலந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ளது திருவந்தார் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், திருவந்தார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதிய உணவு தயார் செய்ய குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிக்க சத்துணவு ஊழியர்கள் முயன்றனர். அப்போது. குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல் துறைக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் குடிநீர் தொட்டியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வில், மலம் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இது போன்ற கீழ்தரமான செயல்களை மர்ம நபர்கள் செய்தனர். இந்த நிலையில், தற்போது, மர்ம கும்பல் மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளது.