சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 752 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
1937-ம் ஆண்டு ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஜா்னல் நிறுவனம் (ஏ.ஜே.எல்), நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது. அப்பத்திரிகை, காங்கிரஸ் கட்சி தொடர்பான செய்திகளை பிரதானமாகத் தாங்கி வந்தது. 1947-ம் ஆண்டு சுதந்திரத்துக்கு பிறகு முதல் பிரதமராக பதவியேற்றதால் இயக்குனர் பதவியில் இருந்து நேரு விலகினாா்.
இதனிடையே, அப்பத்திரிகை கடனில் சிக்கித் தவித்ததால், 2008-ம் ஆண்டு மூடப்பட்டது. அப்போது, அந்நிறுவனம் (ஏ.ஜே.எல்.) காங்கிரஸ் கட்சிக்கு 90.21 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது. இதையடுத்து, தலா 38 சதவீதம் பங்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்தை வாங்கியது.
இந்த பணப் பரிமாற்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தாா். இது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோருக்கு கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் 752 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனம் மற்றும் யங் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமாக டெல்லியிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம், லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையிலுள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலம் ஆகிய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தி 2-வது குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.