ஹவாய் தீவு கடற்படைத் தளத்தின் அருகே இராணுவ விமானம் தரையிறங்கியபோது திடீரென பாதை மாறி ஓடுதளத்தை தாண்டிச் சென்று கடலில் பாய்ந்தது. எனினும், விமானத்தில் இருந்த 9 வீரர்களும் நீந்தி கரை திரும்பினர்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்று ஹவாய் தீவு. இத்தீவில்தான் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய 5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள் இணைந்து 9,000 கோடி ரூபாய் செலவில் 4012 மீட்டர் உயரத்தில் மிகப்பெரிய தொலைநோக்கியை அமைத்திருக்கிறார்கள்.
இத்தீவில் விமானப்படை தளம் அமைந்திருக்கிறது. இந்த விமானப்படைத் தளத்தில் இராணுவ விமானம் ஒன்று தரையிறங்கியது. அப்போது, அந்த விமானம் திடீரென பாதை மாறி ஓடுதளத்தைத் தாண்டிச் சென்று கடலில் பாய்ந்தது.
கடற்கரைக்கு அருகிலேயே விமானம் விழுந்ததால் மூழ்காமல் இருந்தது. இதனால், அந்த விமானத்தில் இருந்த 9 வீரர்களும் நீந்தி கரை சேர்ந்தனர்.
விபத்தில் சிக்கிய இந்த பி-8 போஸேடான் விமானம் இராணுவ கண்காணிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 737 ஜெட் விமானங்களைப் போன்றே வடிவமைப்பு கொண்ட இந்த விமானங்களை, போயிங் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், மோசமான வானிலை மற்றும் மிகச்சிறிய ஓடுதளம் ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று விமான வல்லுநர் பீட்டர் ஃபோர்மன் கூறியிருக்கிறார். அதேசமயம், விமானத்தின் பைலட் விமானத்தை எங்கு இறக்கத் தொடங்கி இருக்க வேண்டுமோ அந்த இடத்தைத் தவற விட்டிருக்கலாம் என்றும், இதுகூட இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.