சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழக்கம் போல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மேல் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் அருகே உள்ள ஏசி எந்திரத்தில் திடீரெனத் தீப்பொறி கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் திரும்பிய திசை எல்லாம் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த புகை அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளிலும் பரவியது.
இதனால், என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தவித்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரும் பதறிப்போனார்கள். உடனே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.
மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், தீ மற்றும் புகை மூட்டத்தைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். நோயாளிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். தீ விபத்து நடந்த நேரம் காலை நேரம் என்பதால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
திமுக ஆட்சி அமைந்தது முதலே மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டப்படுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.