திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான, இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுகவைச் சேர்ந்த தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமாக பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறையைச் சேர்ந்த 5 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன. தற்போது அந்த அறைகளின் சீல் அகற்றப்பட்டு அறைகளைத் திறந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சோதனையையொட்டி, 20 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3 -ம் தேதி முதல் நவம்பர் 8 -ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடைபெறும் ஐடி ரெய்டு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ரெய்டு முடிவில் அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் ஐ.டி. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.