உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை மீண்டும் தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், நாளை காலை அனைவரும் மீட்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தர்காஷி என்கிற இடத்தில் சில்க்யாரா சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். பணியின்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, தொழிலாளர்களை மீட்கும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதேசமயம், தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழாய் வழியாக கேமரா ஒன்றும் அனுப்பப்பட்டது. அக்கேமரா படம்பிடித்து அனுப்பியதில், தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பாதையைத் தயார் செய்வதற்காக, அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இதுவரை 800 மி.மீ. விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை சொருகப்பட்டிருக்கிறது.
ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்புப் பணிகள் தீவிரமாகும்” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து எஸ்.பி. அர்பன் யதுவன்ஷி கூறுகையில், “நேற்று இரவு முதல் மீட்புப் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 39 மீட்டரை கடந்திருக்கிறோம். தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மீட்பு நடவடிக்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. தடைகள் ஏதும் இல்லை என்றால், தொழிலாளர்களை விரைவில் மீட்க முடியும்” என்றார்.
இதனிடையே, சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளியின் குடும்ப உறுப்பினர் சுனிதா ஹெம்ப்ராம் கூறுகையில், “இங்கே சிக்கியுள்ள எனது மைத்துனருடன் நான் பேசினேன். அவர் நலமுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார். தொழிலாளர்களுக்கு உணவு, உடைகள் மற்றும் பிற பொருட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாளை காலை அனவரும் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். சிக்கிய தொழிலாளர்களுடன் மருத்துவர்களும் உரையாடினர்” என்றார்.
தொழில்நுட்பம், சாலை மற்றும் போக்குவரத்து கூடுதல் செயலாளர் மஹ்மூத் அகமது கூறுகையில், “நள்ளிரவு 12:45 மணியளவில் நாங்கள் ஆகர் இயந்திரம் மூலம் துளையிடத் தொடங்கினோம். இதுவரை நாங்கள் மேலும் 3 குழாய்களை தள்ளிவிட்டோம். கூடுதலாக 800 மி.மீ. குழாய் சுரங்கப்பாதைக்குள் 21 மீட்டர் தள்ளப்பட்டிருக்கிறது.
நாங்கள் சுரங்கப்பாதையின் உள்ளே 45-50 மீட்டர் அடையும் வரை, சரியான நேரத்தை எங்களால் வழங்க முடியாது. நாங்கள் கிடைமட்ட துளையிடல் செய்கிறோம். அங்கிருந்து 8 மீட்டர் தூரத்திற்கு உள்ளே நுழைந்தோம். மீட்புப் பணியில் தடைகள் ஏதும் ஏற்படவில்லை என்றால் இன்று இரவு அல்லது நாளை காலை நல்ல செய்திகள் வரலாம். பைப்லைன் போடுவதற்கு நடுவில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை” என்றார்.