மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இன்று இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக, மேட்டுப்பாளையம் – ஹில்குரோவ் இடையே பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாள பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
இந்த நிலையில், 180 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து, மலை இரயில் இன்று காலை 7:10 மணிக்குப் புறப்பட்டது. அப்போது, ஹில்குரோவ் தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து கல்லாறு பகுதியில் மலை இரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மலை இரயிலில் பயணிப்பதற்காக, சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி தரப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே அதிகாரிகள், இரயில்வே ஊழியர்களைக் கொண்டு, தண்டவாள பாதைகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை இரயில் போக்குவரத்து 3 முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.