ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒரு நாள் போர் நிறுத்தம் என்கிற வகையில், போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர்.
அதோடு, வெளிநாட்டினர் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் இத்தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 1,400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டது. முதலில் விமானப்படை மூலம் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், தொடர்ந்து கப்பல்படை மற்றும் காலாட்படைகளையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.
இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கையில், ஹமாஸ் தீவிரவாதிகள் தலைமையகம் உட்பட 1,400 முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 14,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான இப்போர் 46-வது நாளாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களாகப் போர் நடைபெற்று வருவதால், காஸா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, அம்மக்களுக்கு உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, அமெரிக்கா உதவியுடன் கத்தார் நாடு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வது தொடர்பான மத்தியஸ்தரராக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஹமாஸ் தீவிரவாதிகள் பிடித்துச் சென்ற பிணைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாகவும், இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும் கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவம் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்தால் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 240 பிணைக் கைதிகளில் 50 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.
இதையடுத்து, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளை விடுவிக்க, கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்கிற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
எனவே, ஹமாஸ் தீவிரவாதிகள் விரைவில் பிணைக் கைதிகளை விடுவிக்கும் என்றும், பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.