தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரமாகக் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், பகல் நேரங்களில் விட்டுவிட்டும், இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் பெருமளவு வெள்ளநீர் தேங்கியுள்ளது. அந்த நீரை மோட்டார் பம்ப்செட் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இதனிடையே, மூலக்கொத்தளம் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் சென்னை மாநகரப் பேருந்து ஒன்று செல்ல முயன்றபோது, மழைநீரில் சிக்கிக் கொண்டது.
இது தொடர்பாக, தகவல் அறிந்த பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் பேருந்து பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைந்து சென்று பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர்.
சென்னையைப் பொறுத்தவரை இதுவரை 350 மி.மீ முதல் 400 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விடக் குறைந்த அளவுதான் என்றாலும், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.