ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகளின் எணிக்கையை 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்ட போது, லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில் லக்னோ அணியை சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கும் அதிக தொகை கொடுத்து சஞ்சீவ் கொயங்கா வாங்கினார். இதையடுத்து உடனடியாக லக்னோ அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் காரணமாக லக்னோ அணியை கட்டமைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கெளதம் கம்பீர் அறிவுறுத்தலின் பேரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆண்டி பிளவர், பவுலிங் பயிற்சியாளாராக மார்னே மோர்கல், பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
அது மட்டுமல்லாமல் லக்னோ அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை ஏலத்தில் விடாமலேயே ஒப்பந்தம் செய்தது. இதன்பின் கெளதம் கம்பீர் தலைமையில் லக்னோ அணி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று தரமான வீரர்களை சிறந்த தொகை கொடுத்து வாங்கியது.
அதேபோல் இளம் வீரர்களான ஆயுஷ் பதோனி, ஆவேஷ் கான், மோசின் கான், தீபக் ஹூடா உள்ளிட்டோரையும் வாங்கி அசத்தியது.
இதன்பின் நடைபெற்ற 2 ஐபிஎல் தொடர்களிலும் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இருந்தாலும் லக்னோ அணி கோப்பையை வெல்ல முடியாததால், அந்த அணி நிர்வாகம் பயிற்சியாளர்களை மாற்ற முடிவு செய்தது.
அதன்படி பயிற்சியாளர் ஆண்டி பிளவர் ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணியில் இருந்து கெளதம் கம்பீர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதற்கேற்ப கவுதம் கம்பீர் அண்மையில் ஷாரூக் கானை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் லக்னோ அணியில் ஆலோசகர் பதவியில் இருந்து விலகுவதாக கெளதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், லக்னோ அணியுடனான மிகச்சிறந்த பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அற்புதமான பயணத்திற்கு துணையாக இருந்த அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்.
❤️❤️ LSG Brigade! pic.twitter.com/xfG3YBu6l4
— Gautam Gambhir (@GautamGambhir) November 22, 2023
குறிப்பாக அனைத்து வகையிலும் எனக்கு ஆதரவளித்த லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீய் கொயங்காவிற்கு நன்றி கூறி கொள்கிறேன். வரும் காலங்களில் லக்னோ அணி மிகச்சிறந்த சாதனை படைத்து, ஒவ்வொரு லக்னோ அணி ரசிகனையும் பெருமை கொள்ள வைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கெளதம் கம்பீர் அறிவித்த சில நிமிடங்களிலேயே, கொல்கத்தா அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெல்கம் பேக் கவுதம் கம்பீர் என்று பதிவிட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
கொல்கத்தா அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள கெளதம் கம்பீர், இம்முறை ஆலோசகராக களமிறங்கவுள்ளார்.
இதனால் கேகேஆர் அணியில் ஏராளமான மாற்றங்கள் நடக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கெளதம் கம்பீருக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.