ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பி.எம்.கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மற்றும் பாலியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை மோடி வழங்கினார்.
ஆனால், கெலாட் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கடந்த 5 ஆண்டுகளில் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக 5 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள மொத்த பலாத்கார வழக்குகளில் 22% ராஜஸ்தானைச் சேர்ந்தவை. எங்கள் தாய்மார்கள் மற்றும் மகள்களின் பாதுகாப்பை கெலாட் அரசால் உறுதிப்படுத்த முடியாது. ஆனால், பா.ஜ.க. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
அசோக் கெலாட் தனது மகனை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தனது மகனை பிரதமராக்க விரும்புகிறார். யாராவது ஜாலோர் மக்களைப் பற்றி நினைக்கிறார்களா? அவர்கள் உங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
ஆனால், பிரதமர் மோடி உங்கள் அனைவரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எங்கள் அரசு அமைந்த பிறகு பி.எம்.கிசான் சம்மன் நிதி 6,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
தினையை குறைந்த ஆதார விலைக்கு வழங்குவோம். சமையல் எரிவாயு சிலிண்டர்களை 450 ரூபாய்க்கு பா.ஜ.க. தரும். பிரதமர் மோடி எத்தனையோ வளர்ச்சிப் பணிகளைச் செய்திருக்கிறார். சந்திரயான் மூலம் இந்தியாவின் கொடியை சந்திரனை அடையச் செய்தார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடமும், கர்தவ்ய பாதையும் உருவாக்கப்பட்டன.11-வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரத்தை 5-வது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்” என்றார்.