மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, கார்த்திகை மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சதுரகிரி கோவிலில் பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குப் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதை அடுத்து, நவம்பர் 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சதுரகிரி மலைக்கோவிலுக்குச் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.