மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதியுடன் நேரு யுவகேந்திரா செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில், 15-வது தேசிய பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள அரசினர் இளைஞர் விடுதி திறந்தவெளிஅரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து, பேசுகையில், நாட்டின் நலனுக்காகவும், இளைஞர்கள் நலனுக்காகவும் நேரு யுவகேந்திரா செயல்பட்டு வருகிறது. நேரு யுவகேந்திரா குழுமம் மூலம் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் கிடைக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பழங்குடியின இளைஞர்கள் சென்று மக்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை, மொழி, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை முன்னேற்றம் ஆகியவற்றை நேரிடையாக பார்வையிடும் வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது.
இதன் மூலம், பழங்குடி சமூகங்களில் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புகள், சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
உலக அரங்கில் பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் முன்னேற வேண்டும் என பாரத பிரதமர் மோடி உழைத்து வருகிறார். நாடு முன்னேற வேண்டும் என்ற அக்கறையும்,பொறுப்பும் இன்றைய இளைஞர்களுக்கும் உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகியமாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் 200 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், நிபுணர்களின் கல்வி அமர்வு, பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, கலாச்சாரப் போட்டி உள்ளிட்டவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.