இந்தியா பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. அமைப்புக்கு ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்காக கடந்த 1950-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைப்பு (யுஎன்ஆர்டபிள்யுஏ) செயல்பட்டு வருகிறது. ஜோர்டான், லெபனான், சிரியா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலம் மற்றும் காசா ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 56 லட்சம் பாலஸ்தீன அகதிகள் இந்த ஐ.நா. அமைப்பில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இந்த அமைப்புக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் ஆண்டுதோறும் நன்கொடை வழங்கி வருகின்றன. இந்த நிதி, அகதிகளின் கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது
இந்நிலையில், அந்த அமைப்புக்கு 2023-24-ம் ஆண்டில் வழங்க வேண்டிய ரூ.42 கோடியில் ரூ.21 கோடியை கடந்த 20-ம்தேதி இந்தியா வழங்கியது. இதற்கான காசோலையை ஜெருசலம் நகரில் உள்ள ஐ.நா. அமைப்பின் அலுவலகத்தில் அதன் வெளியுறவுத் துறை இயக்குநர் கரிம் அமரிடம் பாலஸ்தீனத்துக்கான இந்திய பிரதிநிதி ரேணு யாதவ் வழங்கினார்.
இதுகுறித்து ரேணு யாதவ்கூறும்போது, “இந்த பிராந்தியத்தில் ஐ.நா. அமைப்பு மேற்கொண்டு வரும் செயல்கள் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கு வழங்கி வரும் சேவைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்” என்றார்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்புக்கு வழங்கும் வருடாந்திர நிதியுதவியை மற்ற நாடுகளும் அதிகரிக்க வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.