திருநெல்வேலி மேயர் சரவணனுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய திமுக கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவுக்குப் பாடம் புகட்டும் வகையில், அவர்கள் அனைவரும் பிரபல தேசிய கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி திமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சியில் 55 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 44 திமுக உறுப்பினர்கள், 7 பேர் திமுகக் கூட்டணி உறுப்பினர்கள், 4 பேர் அதிமுக உறுப்பினர்கள் ஆவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழுவின் 9 உறுப்பினர்களுக்கான தேர்தலில், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் அறிவித்த பாலம்மாள், ஆமீனாபீவி, ராஜேஸ்வரி ஆகிய 3 திமுகக் கவுன்சிலர்கள் படுதோல்வி அடைந்தனர்.
ஆனால், திமுகப் பொறுப்பாளர் அறிவிப்புக்கு எதிராகப் போட்டியிட்ட திமுக உறுப்பினர்கள் ரவீந்தர், பொன் மாணிக்கம், ஜெகநாதன் ஆகிய 3 பேரும் வெற்றி பெற்றனர். அப்போது முதல் மாநகராட்சியில் மேயர் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், மேயருக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, 6-வது வார்டு பவுன்ராஜ், 7-வது வார்டு மணி, 20-வது வார்டு மன்சூர், 24-வது வார்டு ரவீந்தர் ஆகிய 4 பேர் தற்காலிமாகக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 4 கவுன்சிலர்களும், திமுகவுக்கு பாடம் புகட்டும் வகையில் பிரபல தேசிய கட்சியில் இணைய உள்ளதாகவும், அதற்கான ஆலோசனையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.