நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே முக்கிய நகரங்களை இணைக்கும் ரெயின்போ பாலம் அமைந்திருக்கிறது. இந்த ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் 4 எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள அமெரிக்கா – கனடா எல்லை சோதனைச் சாவடியில் ரெயின்போ பாலம் அருகே கார் ஒன்று வேகமாக வந்தது. அந்தக் கார் திடீரென வெடித்துச் சிதறியது. இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக புலனாய்வு ஏஜென்ஸி தெரிவித்திருக்கிறது.
ரெயின்போ பாலத்தின் எல்லையில் கார் வெடித்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ முயற்சியாக இருக்கலாம் என்கிற கோணத்தில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இது குறித்து நியூயார்க் கவர்னர் காதே ஹோகுல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “நயாகரா நீர்வீழ்ச்சி அருகேயுள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்திருக்கிறார்.