ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2 அதிகாரிகள் உட்பட 4 இராணுவத்தினர் உயிரிழந்த நிலையில், கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் காலகோட் தாலுகா பாஜி மால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு நேற்று ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 சிறப்புப் படை கேப்டன்கள் உட்பட 4 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதேசமயம், தீவிரவாதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தியதால், இரவோடு இரவாக கூடுதல் படை வரவழைக்கப்பட்டது.
இதன் பிறகு, அப்பகுதி முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை தீவிரவாதிகளுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் தொடர்ந்தது. இந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தான் ஆதரவு முக்கியத் தீவிரவாதி தனது கூட்டாளியுடன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கொல்லப்பட்ட முக்கியத் தீவிரவாதியின் பெயர் குவாரி என்பது தெரியவந்திருக்கிறது. இவன், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன். லஷ்கர் இ தொய்பா அமைப்பில் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் தீவிரவாதி. கடந்த ஒரு வருடமாக தனது குழுவுடன் இணைந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதியில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான்.
டாங்கிரி மற்றும் கண்டி தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் தீவிரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறான். குகைகளில் மறைந்திருந்து ஐ.இ.டி. வெடிபொருளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவன். துப்பாக்கிச் சுடும் பயற்சியும் பெற்றவன். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவன்” என்று தெரிவித்திருக்கிறார்.