தீபத்திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள திருச்சி, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாள் மற்ற கார்த்திகை நாட்களைவிட விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். அன்றைய தினம் மாலை நேரத்தில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழாவும் நடைபெறும். அந்த வகையில், இந்த வருட கார்த்திகை தீபத் திருவிழா, நாளை மறுநாள் அதாவது 26 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம், பொதுமக்கள் தங்களது வீடு, வர்த்தக நிறுவனங்கள், கோவில்களில் அகல்விளக்கில் தீபமேற்றி வழிபாடு நடத்துவர். அவ்வாறு ஏற்றப்படும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, திருச்சி, திருப்பூர், கோவை, திருமவண்ணாமலை, நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் உள்ள தொழிலாளர்கள் சிலரிடம் பேசியபோது, நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அகல்விளக்குச் செய்வதற்குத் தேவையான மண், ஏரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எடுத்து வருகிறோம்.
திருவிழா காலங்களில் மட்டுமே விளக்கு விற்பனையாகிறது. மற்ற நாட்களில் போதிய வருமானம் இல்லை. ஆனாலும், குலத்தொழிலாக, இத்தொழிலை செய்து வருகிறோம்.
நாளொன்றுக்கு, 2,000 முதல், 3,000 விளக்குகள் தயாரித்து வருகிறோம். தீபம் அன்று அகல்விளக்கில் விளக்கேற்ற வேண்டும் என்ற ஐதீகம் காரணமாக, தற்போது அகல்விளக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது என்றார்.