தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் தெலங்கானாவின் தலைவிதி மாற்றமடையும் என்று கூறினார்.
தெலங்கானா மாநிலத்தில் வருகிற 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும், கே.சி.ஆர். கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வரும் நிலையில், அக்கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஆகவே, தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றன. இதையடுத்து, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் தெலங்கானாவின் தலைவிதி மாற்றமடையும் என்பதை பா.ஜ.க. வேட்பாளர்கள் சார்பில் உங்களிடம் கூறிக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி அனுப்பும் பணத்தை கே.சி.ஆரின் ஊழல் அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவழிக்காமல் கொள்ளையடிக்கிறது. இந்த ஆட்சியை மாற்றி, இங்கு பா.ஜ.க.வை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தெலங்கானாவில் அதிக பணவீக்கம் உள்ளது. தெலங்கானா மக்களை திருப்திப்படுத்தும் அரசியலை சந்திரசேகர ராவ் செய்கிறார். ஆனால், பிரதமர் மோடி திருப்தியான அரசியல் செய்கிறார்” என்றார்.