கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மோசடியில் ஈடுபட்ட காரணத்தால் இவருக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதித்து பி.சி.சி.ஐ உத்தரவிட்டது.
பின்னர் 2019 ஆம் ஆண்டு இவரின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அந்த தடை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு நிறைவடைந்தது.
தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கானப் போட்டியில் கேரள கிரிக்கெட் சங்கம் சார்பாக விளையாடினார்.
மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இரண்டு முறையும் இவரை எந்த அணி நிர்வாகமும் தேர்ந்தெடுக்கவில்லை.
இந்நிலையில் கண்ணூரை சேர்ந்த சரீஷ் பாலகோபாலன் என்பவர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது கேரள போலீசில் பணமோசடி புகார் அளித்துள்ளார்.
அவர் அந்த புகாரில், ‘கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தின் நண்பர்கள் ராஜிவ் குமார், வெங்கடேஷ் கினி ஆகியோர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னை அணுகினர். அவர்கள் கர்நாடக மாநிலம் கொல்லூரில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்க இருப்பதாகவும், அதில் ஸ்ரீசாந்த் பங்குதாரராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு நான் முதலீடு செய்தால் என்னையும் பங்குதாரராக நியமித்தாக தெரிவித்தனர். இதனையடுத்து பல்வேறு தேதிகளில் ரூ.18.7 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் தற்போது வரை விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவில்லை. மேலும் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஸ்ரீசாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் மீது ஐபிசி பிரிவு 420யின் கீழ் ஏமாற்றுதல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.