ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இராணுத்தினர் தரப்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜௌரி மாவட்டம் தர்மசாலாவின் பாஜிமால் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூட்டு நடவடிக்கைக் குழுவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அடர்ந்த வனப் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சிறப்புப் படை கேப்டன்கள் 2 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் பிறகு, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தீவிரவாதி உட்பட 2 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 2 நாட்களாக நடந்த என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்தது.
இந்த சூழலில், என்கவுன்ட்டர் நடவடிக்கையின் போது வீரமரணமடைந்த இராணுவ வீரர்களான கேப்டன் எம்.வி.பிரஞ்சல், கேப்டன் ஷுபம் குப்தா, லான்ஸ் நாயக் சஞ்சய் பிஷ்ட் மற்றும் பாராட்ரூப்பர் சச்சின் லார் ஆகியோரின் சடலங்கள் ஜம்முவிற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பூஞ்ச் நகரைச் சேர்ந்த ஹவ் அப்துல் மஜித்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பூஞ்ச் நகரில் நடைபெற்றது.