தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கா்நாடக வனப்பகுதியிலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்துள்ளன. இந்த யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள நொகனூர், மரக்கட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை தெரிவித்துள்ளது.
பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலயங்களில் பாதுகாப்பாக வேலை செய்யுமாறும் மாலை, இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அந்த யானைகளை மீண்டும் கா்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், நொகனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், விவசாய நிலங்களுக்குள் ஒன்றிண்டு யானைகள் புகுந்தாலே தாங்காது. அதிலும், 30-க்கும் மேற்பட்ட யானைகள் என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.