கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் இரயில் இயக்கப்படுகிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா 26 -ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் திருக்கோவில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும்.
சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள, திருவண்ணாமலையில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று முதல் வரும் 27 -ம் தேதி வரை 10 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.
வேலூர் டூ திருவண்ணாமலை, திருவாரூர் டூ திருவண்ணாமலை, தாம்பரம் டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபால், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.