மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டன. அதன்படி, ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என்று மாற்றப்படும் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியிருக்கிறார்.
தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதீய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் கே.சி.ஆர்., மாநில மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்பதால் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
ஆகவே, தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. எனவே, இரு கட்சிகளின் தலைவர்களும் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெலங்கானாவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 30 நிமிடங்களில் ஐதராபாத்தின் பெயர் பாக்யாநகர் என்று மாற்றப்படும். இப்படி மாற்றினால் யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் ஒவைசி அங்கேயே போய்விடட்டும். அவர்களுக்காக சண்டையிடட்டும். இராமர் கோவில் கட்டப்பட்டு விடும் என்று யாரேனும் நினைத்தது உண்டா? ஜவகர்லால் நேருவுக்கோ, இந்திராவுக்கோ அந்தத் துணிச்சல் இருந்ததா? பா.ஜ.க.வாலும், மோடியாலும்தான் இராமர் கோவில் என்ற கனவு நிறைவேறி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு நகரங்களின் முந்தைய பெயர்கள் மீண்டும் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.