உத்தரகாண்டில் துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 14வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள் (auger drilling machine) பழுதடைந்ததால் நேற்று மீட்புப் பணி நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து சுரங்கத்தில் உள்ள அந்த பிளேடுகளை வெளியே எடுக்கும் பணி நடைபெற்றது. இன்று காலை அந்த பிளேடுகள் வெளியே எடுக்கப்பட்ட நிலையில், மீட்பு பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
சுரங்கத்திற்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் மலையில் இருந்து செங்குத்தாக துளை அமைத்து (vertical drilling)தொழிலாளர்களை மீட்கலாமா? என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்காக மலைப்பகுதிக்கு துளையிடும் இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றால் இன்று இரவுக்குள் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.