இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த மாதம் 7-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் விட்டது. மின்சாரம், குடிநீர் இன்று மக்கள் அவதிப்பட்டு வருவதோடு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்துகள் இல்லாமல் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, காஸா நகர மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் நடவடிக்கை மேற்கொண்டன. அதேசமயம், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக கத்தார் நாட்டு உதவியுடன் அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், போர் நிறுத்தம் தொடர்பாகவும் பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், கத்தார் மற்றும் அமெரிக்கா முயற்சியில் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தீவிரவாதிகள் சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம், இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க வேண்டும். 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, 4 நாட்களில் 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பது எனவும், பதிலுக்கு 150 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், முதல்கட்டமாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 12 பேர் உட்பட 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. பதிலுக்கு, இஸ்ரேல் சிறையில் இருந்த 39 பாலஸ்தீனிய கைதிகளை அந்நாடு விடுவித்தது.
இந்த 39 பேரில் 25 பேர் பெண்கள், 14 பேர் இளைஞர்கள். மேற்கண்ட 25 பெண்களும் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது, கத்திக்குத்து ஆகிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள். அதேபோல, இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களில், 33 பேர் மேற்குக் கரையில் உள்ள சிறையில் இருந்தும், 6 பேர் ஜெருசலேமில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டதும் சிறையில் இருந்து வெளியே வந்த பெண்கள், அவர்களது குடும்பத்தினருடன் இணைந்தனர். அவர்களை ஆனந்த கண்ணீருடன் குடும்பத்தினர் வரவேற்றனர். இளைஞர்களை தோளில் தூக்கி சந்தோசத்தை வெளிப்படுத்தினர். தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி வாண வேடிக்கை நிகழ்த்தி சந்தோசத்தை வெளிப்படுத்தினர்.
ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் 250 பிணைக் கைதிகளையும் விடுவிக்கும்போது, சுமார் 1,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.