வைகை அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காகக் கூடுதலாக, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 67 அடியைத் தாண்டியுள்ளது.
வைகை அணையிலிருந்து ஏற்கனவே, மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதிக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து இன்று பாசனத்திற்காக வினாடிக்கு 5 ஆயிரத்து 899 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் தரைப்பாலங்கள் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.
மேலும், வைகை அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்