சோமாலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 96-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சோமாலியா அரசு, அவசரநிலையைப் பிறப்பித்தது.
இதனால் சோமாலிய – எத்தியோப்பிய எல்லையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையிலும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
சோமாலியா மட்டுமல்லாமல், அண்டை நாடுகளான கென்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் இதேபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. நூறு வருடங்களுக்கு ஒரு முறை வரும் பயங்கரமான வெள்ளப்பெருக்கு இது என்று சோமாலியாவின் நீர் மற்றும் நிலத் தகவல் மேலாண்மை எச்சரித்திருக்கிறது.
எல் நீனோ (El-nino) என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை அதிகரிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் கனமழையும், வெள்ளமும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.